எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற தாரகமந்திரத்தில் சளைக்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கை.
ஊழல்களால் மாசுபட்ட மனிதர்களின் ஒரு கோர்வையாகவே, ரணிலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
“ரணில் ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன்” என்று தேர்தல் மேடைகளில் அவரை எதிர்த்து பேசிக் கொண்டு, தீப்பொறி கக்கி தமது அரசியல் அடிமைகளின் இரத்தத்தை சூடாக்கிய அரசியல்வாதிகள், இன்று ரணிலை பாதுகாக்க ஒரே அணியில் திரண்டிருப்பது மிகப் பெரிய வேடிக்கையாகவும், வெட்கக்கேடாகமவும் இருக்கிறது.
தோழர் அனுரகுமாரவின் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் குறித்து அதிருப்திகள், முரண்பாடுகள் இருந்த போதிலும், ஊழல் மோசடிகளால் வயிறு உப்பிய, இந்த நாட்டின் பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொள்ளையடித்த “ஊழல் பெருச்சாளிகள்” தக்க தண்டனை பெறவேண்டும் என்ற கருத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.
இந்த ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் தண்டனை கிடைக்கவே கிடைக்காது. காரணம், இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த திருட்டுக் கூட்டணிகள், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்த போதும் இருட்டில் கைகுலுக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டு தமது அரசியல் காய்களை நகர்த்தி வந்துள்ளனர்.
இந்த நாட்டை ஆண்ட ஜே.ஆர்., பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி, கோத்தா ஆகியோர் அனைவரும் சட்டத்தை துச்சமாக மதித்து, தமது இழிவான அரசியலை அரங்கேற்றியவர்களே. சதி அரசியலில் சதுரங்கம் ஆடியவர்களே. மக்களின் வியர்வையையும் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்தவர்களே. மக்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தவர்களே.
கடந்த காலங்களில், இந்த ஆட்சியாளர்கள் சட்டம் என்ற சாட்டையை தமக்கேற்றவாறு சுழற்றி வந்துள்ளனர். நீதித்துறையை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் தமது அரசியல் எதிராளிகளை காயப்படுத்தி இன்பம் கண்டுள்ளனர். வலிமையற்றவர்களை, குரலற்றவர்களை சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
“அரகலய” போராட்டத்தின் போது, பொலிஸாரால் வடிவமைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் “பொதுச் சொத்து சேதப்படுத்தல் சட்டத்தின் கீழ்” கைது செய்யப்பட்டு பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள்? அப்போது வாய் மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இன்று தமது “வர்க்கத் தலைவனுக்குக்” கிடைத்த தீர்ப்பை மட்டும் எதிர்க்க முன்வந்துள்ளனர்.
இன்று ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், கடந்த காலங்களில் நீதித்துறையை அதிகாரத்தின் மூலம் அச்சுறுத்தியவர்களோடு சேர்ந்து கும்மியடித்த குற்றவாளிகளே என மக்கள் கருதுகின்றனர். இவர்கள் இன்று ரணிலுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்குவது, எதிர்காலத்தில் தமக்கெதிராக வரவிருக்கும் நீதிமன்றச் செயற்பாடுகளில் இருந்து தப்புவதற்கே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இன்று ஜனநாயகம் குறித்து குரலெழுப்பும் சந்திரிக்கா அம்மையார், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான சரத் என். சில்வாவை, பிரதம நீதியரசராக நியமித்து நீதித்துறைக்கே தலைமை தாங்கும் உயரிய பொறுப்பை வழங்கினார். அப்போது சந்திரிக்காவின் இந்த நிதித்துறையை மாசுபடுத்திய எதேச்சதிகார செயற்பாட்டை யாரும் எதிர்க்கவுமமில்லை, அதற்கெதிராக மக்களை அணிதிரட்ட முன்வரவுமில்லை.
இன்று பொதுச் சொத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ரணிலை பாதுகாக்க வீதிகளுக்கு வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல்வாதிகள், அப்போது தமது நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌன விரதம் பூண்டிருந்தனர். சந்திரிக்காவின் அந்த கேவலமான அரசியலை, தனியாக நின்று கடுமையாக எதிர்த்தவர் விக்டர் ஐவன் மட்டுமே.
இலங்கையின் 41வது பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா, மஹிந்தவின் “ஹெல்ப்பின் ஹம்பாந்தோட்டை” மோசடி வழக்கில் மஹிந்தவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததாக பகிரங்கமாகவே அறிவித்தார். “அந்தத் தீர்ப்பை நான் வழங்காவிட்டால் மஹிந்த இன்று சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்” என்று பெருமையாகப் பேசியிருந்தார். வேலியே பயிரை மேய்ந்த கதையிது. நீதித்துறையில் தான் செய்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை பெருமையாக சொல்வதை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் அறிவு சூன்யங்கள் நிறைந்த நாடுதான் இலங்கை.
இலங்கையின் நீதித்துறைக்கே தலைமை தாங்கிய சரத் சில்வா, நீதித்துறையை களங்கப்படுத்திய அந்த செயற்பாடு இந்நாட்டின் எந்த அரசியல்வாதியையும் கொதிக்க வைக்கவில்லை. ஏனெனில், தமது அரசியல் வர்க்கத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதுகாப்பு கிடைத்ததால் எதிர்க்கட்சிகள் மௌனமாக இருந்தன.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தனது காட்டுத்தர்பார் ஆட்சிக்கு இடையூறாக இருந்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் காதைப் பிடித்து வெளியே வீசும் அளவிற்கு, இலங்கையின் நீதித்துறை களங்கப்பட்டிருந்தது. இன்று ரணிலின் கைது தீர்ப்பை விமர்சிக்கும் இக்கூட்டம், அப்போது மஹிந்தவின் அந்த இழிச் செயலுக்கு எதிராக உருப்படியாக எதையும் செய்யவில்லை.
இதேவேளை, நீதிமன்றத்தில் தமது நியாயத்தை முன்வைத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமை ரணிலுக்குக் கிடைக்க வேண்டியது அவசியம். அதை யாராலும் மறுக்க முடியாது.
அவர் மீது பட்டலந்த படுகொலைகள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டுகள் இருக்கவே இருக்கின்றன.
எது எப்படியோ, ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதே. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதன் பின்னணியில், நீதித்துறையை தமது கைகளுக்குள் வைத்து களங்கப்படுத்தியே பழக்கப்பட்ட அராஜக அரசியலின் நிகழ்ச்சி நிரல் நிழலாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம், ரணிலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முன்னெடுக்கும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அஸீஸ் நிஸாருத்தீன்
26.08.2025
9.15am